ஹபாயா சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை- ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு!
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா சர்ச்சையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு பஹ்மிதா ரமீஸ் என்ற ஆசிரியர் ஹபாயா அணிந்து சென்றமையினால் கடந்த வாரம் சர்ச்சை ஏற்பட்டதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஹபாயா சர்ச்சை தொடர்பாக பாடசாலையின் அதிபரும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இந்த நிலையிலேயே, பாதிக்கப்பட்ட ஆசிரியை நீதிமன்றத்தை நாடிய போது மீண்டும் அதே பாடசாலைக்கு பணியமர்த்தியமை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் மேல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலவரம் , மாகாண கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொலைபேசி ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளரை தொடர்புகொண்டு உரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக் கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் செயலாளர் அரச தலைவர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
