சபை அமர்வில் கூரிய ஆயுதத்தைக் காட்டி விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் பதற்றம்!
பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர், மாதாந்த கூட்டத்திற்கு கூரிய கத்தியுடன் பிரசன்னமாகியுள்ளார்.
கத்தியுடன் கூட்டத்திற்கு பிரசன்னமானதோடு ஏனையவர்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர், மாநகர சபை அமர்வில் கலந்துகொண்டு விட்டு வெளியேறும் போது, தான் உடுத்தியிருந்த சாரத்தில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை காட்டி ஏனையோரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
ஆயுதங்களுடன் அமர்வில் பங்குபற்றுவதால் உயிர் அச்சுறுத்தல்
இந்தச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலாங்கொடை நகரசபை உறுப்பினர் சுனேத்ரா டி.வீரசிங்க, கருத்துத் தெரிவிக்கையில்,
அமர்வில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு சபைக்குள் வருவது சபையில் உள்ள அனைவரின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் பலாங்கொடை நகரசபை உறுப்பினர் எம்.சந்திரலதா, ஆயுதங்களைக் கொண்டு வரும் உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அவைத் தலைவர் உறுதி
இவ்வாறான நிலையில், பலாங்கொடை நகரசபையின் முன்னாள் தலைவரின் நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஒவ்வொரு உறுப்பினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு என்றும் அவைத் தலைவர் வசந்தகுமார குணரத்ன தெரிவித்துள்ளார்.