இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 173 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளும், 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
இலங்கை (Sri Lanka) மற்றும் நியூசிலாந்து (New Zealand) அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்றைய தினம் (28.12.2024) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 அளவில் நடைபெறவுள்ளது.
டி20 தொடர்
இதற்கு முன் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன.

மேலும் இம்முறையும் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதுவார்கள் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இதன் காரணமாக இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட்
இதேவேளை இன்றைய போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மேலதிகமாக 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவையும் தற்போது விற்று தீர்ந்துள்ளன. ஒரே நேரத்தில் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்க்கக்கூடிய மைதானத்தின் பெரும்பகுதி மைதானத்தில் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ஜனவரி 2ஆம் திகதி நெல்சனில் நடைபெறவுள்ள போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்