வடக்கு, கிழக்கில் கொட்டி தீர்த்த கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடாவிய ரீதியின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெய்த மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், இன்று பெய்யும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் பலவற்றில் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தமிழர் தாயகமான கிழக்கில் கடந்த சில நாட்களாக ஒய்ந்திருந்த மழை, தற்போது மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் அசௌரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முற்றாக வழிந்தோடியுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெய்த மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ள போதிலும் இதுவரை எவரும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என ஐ.பி.சி தமிழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளும் பயிர் செய்கை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள்
ஏற்கனவே பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் இருந்து வடியாத நிலையில், கடந்த மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் கடும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு பழுகாமம், முனைத்தீவு, பட்டாபுரம், வேத்துச்சேனை, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, எருவில், செட்டிப்பாளையம், கிரான்குளம், ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா, செங்கலடி, ஏறாவூர், வந்தாறுமூலை, சித்தாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்திலும் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தமது கால் நடைகளை உயரமான இடங்களுக்கு கொண்டுசென்று பாதுகாப்பதற்காக தற்காலிக கொட்டில்களில் அடைத்து வைத்துள்ளனர்.
தாழ்நிலப் பகுதிகள்
மேலும், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது, வயல் நிலங்களும் சிறுதோட்டப் பயிர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை கால் நடைகளும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறிப்பிடுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச நிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சமைத்த உணவுகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கிவருகின்றன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் அதிகரித்துவருகின்றது.
இதன் அடிப்படையில் நீர்பாசத் திணைக்களமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி குளத்தின் நீர்மட்டத்தை குறைக்க தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகளும் 3.5 அடி திறக்கப்பட்டு நீரானது வௌியேற்றப்பட்டுவருகின்றது.
இதன்காரணமாக அம்பாறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்கமாமம், அக்கரைப்பற்று, அட்டளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாந்தமருந்து, கல்முனை போன்ற பிரதேச செயலக் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் ஆபத்தானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் கூறியுள்ளார்.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் மழை பெய்வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெற் செய்கை நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், விவசாயிகள் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு நோக்கிய பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் விடுதலை..! யாழ். நீதிமன்றம் உத்தரவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |