உக்ரைன் மின்சாரக் கட்டமைப்பிற்குப் புதிய கவசம்...! ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனைப் பாதுகாப்பதற்காக 540 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பிரம்மாண்ட இராணுவ உதவித் திட்டத்தைப் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த உதவித் திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் துல்லியமாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட 1,000 புதிய அதிநவீன இலகுரக பல்துறை ஏவுகணைகள் (Lightweight Multirole Missiles - LMM) உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமீபகாலமாக உக்ரைனின் ஓடேசா (Odesa) உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மின்சார நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரக் கட்டமைப்பு
இந்த மின்சாரக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதே பிரித்தானியாவின் இந்தத் திடீர் உதவியின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், உக்ரைனின் தற்காப்புப் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப் பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய நிர்வாகம் உக்ரைனுக்கான உதவிகளைக் குறைப்பது குறித்துப் பேசி வரும் வேளையில், ஐரோப்பிய நாடான பிரித்தானியா வழங்கியுள்ள இந்த மிகப்பெரிய உதவி, போர்க்களத்தில் உக்ரைன் வீரர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |