வீட்டுப்பணிப்பெண்களாக இனி வெளிநாடு செல்ல முடியாது..! அமைச்சர் கூறும் மாற்றுவழி
இலங்கைப் பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவுகளையும் திட்டங்களையும் சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதே அமைச்சர் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
திறமையான பணிகளில்
"பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
பின்னர், அதிக ஊதியம் பெறும் திறமையான பணிகளில் வெளிநாட்டு வேலைகளைத் தேட பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.
பத்து வருடங்களுக்குள்
மேலும், இந்த விடயம் தொடர்பான முன்மொழிவுகளில் அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடக்கப்பட வேண்டும்." என்றார்.
அடுத்த பத்து வருடங்களுக்குள் வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை முற்றாக நிறுத்துவதும், அதற்குப் பதிலாக அவர்கள் திறமையான பிரிவுகளில் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதும் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |