ஐ.நாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!
சதுப்புநில சூழல் அமைப்புகளை புனரமைப்பதிலும் புத்துயிர் பெறவைப்பதிலும் முன்னுதாரணமான பணிகளை முன்னெடுக்கும் நாடாக இலங்கை ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் (27) கென்யாவின் நைரோபியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா.சுற்றுச்சூழல் பேரவையில் இந்த விருது வழங்கப்பட்டு இலங்கை கௌரவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலக மறுசீரமைப்பு முதன்மைக் குழுவாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டதற்கான விருதினை, இலங்கையின் காலநிலை மாற்ற அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் ஜாசிங்க மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செவ்வந்தி ஜெயக்கொடி ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு
சுற்றாடல் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையின் தலைமைத்துவத்தை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு மற்ற நாடுகளுக்கு உத்வேகமாக அமைவதாக கூறப்படுகிறது.
தவிரவும் இந்த மதிப்புமிக்க விருது, சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான ஐ.நா.வின் கோட்பாடுகளை இலங்கையின் திறமையான பயன்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைவதோடு, இது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகளை வெளிகாட்டுவதாகவும் அமைகிறது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஏற்படுத்திய விளைவுகளின் பாரதூரத்தினை கடலோரப் பாதுகாப்பாளர்களாக சதுப்புநிலங்கள் குறைத்துள்ளன, இவற்றின் அழிவை தடுக்கவும் அவற்றை முறையாக பராமரிப்பதற்குமான பொறிமுறையினை இலங்கை கையாள ஆரம்பித்தது.
இளைஞர்களின் ஈடுபாடு
அதன்பிரகாரம், 2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் கரையோர சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதற்கான நிபுணர் குழுக்கள், பணிக்குழுக்கள், கொள்கைகள், செயல் திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு வழிகாட்டுதல்களை நிறுவி, பயனுள்ள நடவடிக்கை மற்றும் பாதுகாப்பிற்கான விரிவான கூட்டணிகளை நாடு உருவாக்கியது.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எதிர்கால இளைஞர்களின் ஈடுபாடு, அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை, கல்வியாளர்கள் மற்றும் சமூகம் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் ஒத்துழைப்போடு சிறந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது.
இந்நிலையில், ஐநாவின் இந்த மறுசீரமைப்பு விருதானது, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் நிலையான தீர்வுகளுக்கான சரியான நேரத்தில் கிடைத்த அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |