இலங்கை பால்பண்ணை விவசாயிகளுக்கு நற்செய்தி : இந்தியாவில் வழங்கப்படவுள்ள பயிற்சி
இலங்கை பால் பண்ணை விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பால் பண்ணைத் துறையில் பயிற்சி பெறவுள்ள 19 விவசாயிகள் 16ஆம் திகதி இந்தியாவிற்குப் புறப்படவுள்ளனர்.
அமைச்சருடன் சந்திப்பு
இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் இந்தப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பயிற்சி பெறவுள்ள பால் பண்ணை விவசாயிகள், விவசாய அமைச்சகத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நமல் கருணாரத்னவைச் சந்தித்தனர். நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அமுல் பால்பண்ணையை பார்வையிடும் வாய்ப்பு
இந்தப் பயிற்சித் திட்டம், இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள தேசிய பால் அபிவிருத்தி சபையின்(NDDB) அனுசரணையில் நடத்தப்படுகிறது. உலகின் பால் பதப்படுத்தும் தொழில்துறையில் ஒரு மாபெரும் நிறுவனமான அமுலின் (GCMMF) உற்பத்தி மற்றும் மேலாண்மை செயல்முறைகளை இலங்கை பால் விவசாயிகளும் உற்றுநோக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தொழில்நுட்பத்தின் மூலம் தினசரி பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் பொருட்களின் மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துதல், பால் பண்ணைகளை இயந்திரமயமாக்குதல், பசுக்களை நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் தரமான ஊட்டச்சத்துப் பராமரிப்பை வழங்குதல் போன்ற துறைகளில் நடைமுறை அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |