சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்
சிறிலங்கா அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமின்றி வேறு எந்த விடயத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் சிலர் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும் மேலும் சிலர் அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாது
இந்த நிலையில், அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க மாட்டோம் என வெளிநாடுகளுக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் எவ்வாறு சவால் விட முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்க மாட்டேன் என கூறினாலும், இறுதியாகப் பதவிகளில் இருந்த மூன்று அதிபர்களும் சர்வதேச சமூகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போதைய அதிபரும் அவர் தலைமையிலான அரசாங்கமும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.