ஊடகவியலாளர் நிலாந்தனை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் ஆகியவற்றின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைபு் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 12 மணிக்கு கொழும்பு - 05 கிருளப்பனை நாரேன்பிட்டியவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (03) பிற்பகல் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு காவல்துறை புலனாய்வு அதிகாரிகள் மேற்படி அழைப்புக் கடிதத்தை அவரது குடும்பத்தினரிடம் கொடுத்ததுடன் அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட பல விபரங்களை கேட்டு பதிவு செய்து சென்றுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறியும் பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஊடகவியலாளர் நிலாந்தன் மீது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது அவரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ச்சியாக அச்சுறுத்துவதாக அமைந்துள்ளதுடன், இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் அமைப்புகளிடம் கோரிக்கை

தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் இது போன்ற விசாரணைகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யும் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்குமாறு மனித உரிமைகள் அமைப்புகளிடம் ஊடகவியலாளர் நிலாந்தன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.