அரசாங்கமும் - தேர்தல் திணைக்களமும் மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது : செல்வம் எம்.பி
அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடக்குமா இல்லையா?
உச்ச நீதிமன்றம் தேர்தல் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறும், தேர்தல் நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அதிபர் தேர்தல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களம் தேர்தலை நடத்துவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்கள் சக்கரத்தை கண்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சிந்தனையே உள்ளது.
தேர்தல் திணைக்களத்தின் நிலைப்பாடு
ஆகவே, தேர்தல் திணைக்களம் தேர்தலை வைப்பதாயின் உடனடியாக தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும்.
தற்போது 9 ஆம் திகதி தனது கருத்தை சொல்வதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியாமல் இருக்கிறது.
தேர்தல் வருமா, வராதா என கட்சிகளும், வேட்பாளர்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இறுதி முடிவை 9 ஆம் திகதியாவது அறிவிக்க வேண்டும்” - எனத் தெரிவித்தார்.
