பொதுத் தேர்தல் தொடர்பில் பெப்ரல் அமைப்பு தகவல்
புதிய இணைப்பு
ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு குற்றச் செயல்களும் பதிவாகவில்லை.
பொதுத் தேர்தலும் அவ்வாறே நடத்தப்படும் என நம்புவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட அரசியல் கருத்தைக் கொண்ட புதிய ஜனாதிபதியின் கீழ் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பதால், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யாமல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பெப்ரல் அமைப்பு நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வரும் நிலையில், அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), தேர்தல்கள் ஆணைக்குழுவை உத்தியோகபூர்வமாக இன்றும் தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
இருப்பினும், நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்பதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே இயக்கத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் ஏழு முதல் 17 நாட்களுக்குள் அழைக்கப்பட வேண்டும் அத்தோடு அதன் பின்னர் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி குறித்து ஊடகம் கேள்வியெழுப்பிய போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு ஜனாதிபதியால் தேவையான பணம் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |