அச்சத்தின் பிடிக்குள் ராஜபக்சர்கள் - சந்திரிக்கா வெளியிட்ட தகவல்
இதுவரை செய்த ஊழல்கள் காரணமாக சிறைக்குச் செல்ல வேண்டியேற்படும் என்ற பயத்தின் காரணமாவே ராஜபக்சர்கள் பதவி விலகாமல் உள்ளனர்.
இவர்களுக்கு எவ்வளவு சொத்து, பணம் இருந்தாலும் போதாது என முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று, அத்தனகல்ல - ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போது நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. இருப்பினும் ராஜபக்சர்கள் ஒன்றும் கோளாதவாறு ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர். அதை யாராலும் அழிக்க முடியாது. நான் கட்சியை விட்டு விலகவில்லை. ஆனாலும், என்னை துரத்தினார்கள். மக்கள் இன்னும் என்னை அழைக்கின்றனர்.
தற்போது கட்சியில் உள்ளவர்களோடு கைகுலுக்குவதில் அர்த்தமில்லை. திருடர்கள் எல்லாம் போன பின் நாங்கள் அழகான ஆட்சியை அமைப்போம்” என்றார்.