சிறிலங்காவின் அதிபர் தெரிவில் கொலைமிரட்டல்! வெளிவரும் திடுக்கிடும் பின்னணி
புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னதாக தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, திலக் ராஜபக்ஷ மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொலைமிரட்டல் விடுத்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் யார்?
எனவே, புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக அண்மையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தி, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தல் முறையானதா இல்லையா என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத ஒருவர் தமக்கு அழைப்பை ஏற்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மர்ம நபர் ஒருவர் தம்மை தொடர்புகொண்டு, சபையிலிருந்து பதவி விலக வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
உரையாடல் அடங்கிய பதிவு சமர்ப்பிப்பு
குறித்த நபரின் உரையாடல் அடங்கிய பதிவை சமர்ப்பித்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் சபாநாயகரிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் திலக் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தியுள்ளார்.
