இன, மத ரீதியான பிளவுகளுக்கு அரசாங்கம் துணைபோகாது - பந்துல குணவர்தன
இலங்கை மக்கள் மத்தியில் இன, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இனியொருபோதும் இடமளிக்காது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் அவதானத்துடன் செயற்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“மத நல்லிணக்கத்தை சீர்குழைத்து இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தி, நாட்டை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் சில குழுக்கள் திட்டமிட்டு செயல்படுகின்றன.
மத ரீதியான பிளவுகள்
மத முரண்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதால் மத ரீதியான பிளவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அது மாத்திரமின்றி வெவ்வேறு மதங்களைக் சார்ந்தவர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டும் வகையில் சில குழுக்கள் மிகவும் சூட்சுமமாக செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் முழுமையாக அவதானம் செலுத்தியுள்ளோம்.
அதற்கமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கும் , உரிய அதிகாரிகளுக்கும் அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.
