அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
அறுகம் குடா(arugam bay) பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்(us embassy) உட்பட ஆறு வெளிநாட்டு தூதரகங்கள் பயண ஆலோசனைகளை வழங்கியிருந்த போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஒக்டோபர் மாதத்தின் கடைசி எட்டு நாட்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 27,649 ஆக இருந்த வெளிநாட்டுப் சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் கடைசி எட்டு நாட்களில் 35 சதவிகிதம் அதிகரித்து 37,287 ஆக பதிவாகியுள்ளதாக அரசு நடத்தும் சுற்றுலா ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவர இணையதளம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 23 அன்று, அமெரிக்கத் தூதரகம், தாக்குதல் பற்றிய நம்பகமான தகவல்கள் இருப்பதாக தெரிவித்து பிரபலமான சுற்றுலாத் தலமான அறுகம் குடாவைத் தவிர்க்குமாறு அதன் நாட்டவர்களைக் கேட்டுக் கொண்டது, பின்னர், அவுஸ்திரேலியா(australia), இஸ்ரேல்(israel), ரஷ்யா(russia), நியூசிலாந்து(new zealand), கனடா(canada) மற்றும் இங்கிலாந்து(england) ஆகிய நாடுகள் இதைப் பின்பற்றின.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
அதிக எண்ணிக்கையிலான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் அறுகம் குடாவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இலங்கை காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது.
இந்த மாத இறுதியில் தொடங்கும் உச்ச சுற்றுலாப் பருவத்திற்கு முன்னதாக வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை இரத்து செய்யப்படலாம் என சுற்றுலாத் துறை தாரிகளால் எழுப்பப்பட்ட கவலைகளுக்கு மத்தியில், தாக்குதல் தகவல் தவறான எச்சரிக்கையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இந்த வாரம் தெரிவித்தார்.
அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து நாட்டிற்கு வருகை தருவதாக ஹேரத் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 109,199 ஆக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஒக்டோபர் மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்து 135,907 ஆக பதிவாகியது. எவ்வாறாயினும், அந்த அதிகரிப்பு விகிதம் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 44 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக உள்ளது.
ஏப்ரல் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து 2020 இல் கோவிட் தொற்றுநோய் மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடியால் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்து இலங்கை கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. நெருக்கடிக்குப் பின்னர் நாட்டின் பொருளாதார மீட்சியில் சுற்றுலாத்துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய ஒன்றாக மாறியுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |