நிறைவேற்று அதிகாரத்தின் தேவைக்கு ஏற்ப நீதிமன்றத்தை செயற்படுத்த முயற்சி - நீதிபதிகளுக்கும் எச்சரிக்கை!
ஸ்ரீலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால், நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, நிறைவேற்று அதிகாரத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் நீதிமன்றத்தை செயற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்க வேண்டிய நிறுவனமான நீதிச் சேவை ஆணைக்குழுவே இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும், இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த 9ஆம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ சோமரத்னவினால், நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், அவர்களுக்கான பயிற்சி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் நீதவான்கள் குறித்த பயிற்சி செயலமர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமெனவும், அவ்வாறு பங்கேற்காவிடின், பதவி உயர்வுகள், வருடாந்த சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு பயிற்சிகளுக்கு தெரிவு செய்யும்போது இந்த விடயம் கருத்திற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அழுத்தமாக அமையாதா? அதனைவிட கொரோனா தொற்றுக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலேயே இந்த செயலமர்வு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அதனைவிட வேறு விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய தீர்ப்பு வழங்கப்படாமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் காவல்துறையின் வேண்டுகோளுக்கு அமைய தீர்ப்புகளை வழங்குமாறு இதன்போது வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு நீதவான் நீதிமன்ற தீர்ப்புகள் இவ்வாறுதான் அமைய வேண்டுமென தீர்மானிக்க யாருக்காவது இயலுமா? நீதிமன்ற தீர்ப்புகளை இதன்போது பிழையென வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு நீதிபதிகளை அச்சுறுத்த முடியுமா? இது ஜனநாயகமா? இது நீதிமன்றங்களின் சுயாதீனத் தன்மையை பாதிக்காதா? நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்க வேண்டிய நிறுவனமான நீதிச் சேவை ஆணைக்குழுவே இவ்வாறு செயற்பட்டுள்ளதோடு, நிறைவேற்று அதிகாரத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் நீதிமன்றத்தை செயற்படுத்த எடுத்த முயற்சி இதனூடாக வெளிப்படுகின்றது.
நீதவான்களின் தீர்ப்புகள் தொடர்பில் கேள்வி கேட்பதற்காக இவ்வாறான ஒரு செயலமர்வை ஏற்பாடு செய்தது ஏன்? காவல்துறையின் தேவைக்கு ஏற்ப போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை தடுக்குமாறு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு இதன்போது நீதிவான்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, நீதிச் சேவை ஆணைக்குழு சுயாதீனமான ஒரு நிறுவனம் எனவும், அதன் செயற்பாடுகளில் தலையீடு செய்ய நீதி அமைச்சுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டதோடு, இதுத் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிக்க இரு வாரங்கள் காலஅவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டார்.