தீவிரமடையும் டெல்டா வைரஸ்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் மேலும் கொரோனா தொற்று தீவிரமடைவதற்கு அரசியல் சார்ந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களே காரணம் என்று ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரஅமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் இந்தியாவைப் போல மிகமோசமான நிலைமைக்கு இலங்கை தள்ளப்படலாம் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் தீவிரமடைந்து வரும் டெல்டா வைரஸ் பரவல் தொடர்பில் ஸ்ரீலங்கா மருத்துவ சங்கத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் அடையாளங் காணப்படும் 100 கொவிட் - 19 தொற்றாளர்களில் இருவர் உயிரிழப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இந்நிலை தொடருமாக இருந்தால், இன்னும் இருவார காலத்தில் எமது நாடு இந்தியாவின் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவ்வறிக்கையின் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தபோது, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பிற்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசீ பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தவேண்டியுள்ளது.
உயர்மட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமைவாகவே நாட்டில் நடைமுறையிலிருந்த சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மாறாக அவை சுகாதார அமைச்சின் தேவைக்கு அமைவாகத் தளர்த்தப்படவில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினதும் மருத்துவ வசதிகளினதும் இயலுமையைப் பெருமளவால் அதிகரித்தாலும் அதனால் பயன்பெறமுடியாது. ஏனெனில் இவ்விடயத்தில் அரசியல்வாதிகளினால் அரசியல் ரீதியான தீர்மானங்களே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.