நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கோட்டாபய- முன்வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள்!
கொரோனா தொற்றின் தாண்டவத்திற்கு மத்தியில் இலங்கையில் தேசிய பேரிடர் நிலைமையை பிரகடனப்படுத்தி, எதிர்கட்சிகளினதும் ஆலோசனைகளை பெற சர்வகட்சி மாநாட்டை ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் கூட்டவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றினால் கொத்துகொத்தாக மக்கள் உயிரிழந்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, தான்தோன்றித்தனமான முடிவுகளையே எடுத்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டை முடக்காமல் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது. எனினும் வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டவை சுயமாக முடக்கத்தை ஆரம்பித்தன. இதனை எதிர்பார்த்திராத அரச தலைவர் கோட்டாபய விருப்பம் இல்லாவிட்டாலும் நாட்டை முடக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டார்.
எனவே தான் தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் தியாகங்களுக்கு தயாராக வேண்டும் என்று அவர் மறைமுகமாக நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளார். இந்த மறைமுக எச்சரிக்கையின் மூலம் எதிர்வரும் தினங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியாது என்று அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றின் காரணமாக இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கியமை மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அல்ல. அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இன்மையே இதற்கான பிரதான காரணி. இன்று அரசாங்கம் சுகாதார நிபுணர்களினதும் அதேபோல எதிர்கட்சியினரதும் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ள விரும்பவில்லை.
எதிர்கால அழிவுகளை நிறுத்துவதற்காக சர்வகட்சிக் கூட்டத்தை அழைக்கும்படி கோருகின்றோம். இந்த விவகாரத்தில் அரசியல் துளியளவேனும் இல்லை. தேர்தல்களில் அதனை பார்த்துக்கொள்ளலாம். தனித்து முடிவெடுக்கின்ற பழக்கத்தை விட்டு ஓரணியில் பயணிக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
அதேபோல கொரோனா மரணங்கள், பாதிப்புக்களின் உண்மை தகவல்களை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்றது. அவற்றை அம்பலப்படுத்தும்படி கேட்கின்றோம். தேசிய பேரிடராக இதனை அறிவித்து, சமூக பரவல் என்பதை ஏற்றுக்கொண்டு வீழ்ந்துள்ள ஸ்ரீலங்கவை கட்டியெழுப்ப இடமளியுங்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்