உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்- போலிப் பொலிஸாரின் அநாமதேய அழைப்புக்கள்!
உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சிலரிடம் கப்பம் பெற்றுவந்த குழுவினர் தொடர்பான விசாரணைகளை ஸ்ரீலங்கா காவல்துறை ஆரம்பித்துள்ளது.
அவ்வாறு கப்பம் பெற்ற மற்றும் கொடுத்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரலில் ஸ்ரீலங்காவில் நடந்த உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, குறிப்பிட்ட சிலருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள இனந்தெரியாதவர்கள், அந்நபர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என அச்சறுத்தியிருக்கின்றனர். அவ்வாறு அச்சறுத்தலை ஏற்படுத்தியதால் பீதியில் உறைந்தவர்களிடம் குறித்த குழு, சூட்சுமமான முறையில் தகவல்களைப் பெற்று, கப்பம் கேட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக நிலையான தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து பல தடவைகள் அழைப்புக்களை ஏற்படுத்தி ஈஸ்டர் தாக்குதலுடன் நீங்கள் தொடர்பு கொண்டிருப்பதால் விசாரணைகளை நிறுத்தவும், கைதிலிருந்து தப்பவும் குறிப்பிட்ட பணத்தை கப்பமாக அந்தக் குழு கேட்டுள்ளது.
இவ்வாறான போலி காவல்துறையினரது செயற்பாடுகளுக்கு அச்சமடைந்த சிலர் இலட்சம் ரூபாக்களை கப்பமாக கொடுத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கப்பம் கொடுத்த மற்றும் வாங்கியவர்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.