இலங்கையில் ஏற்படவுள்ள அபாய நிலை - வெளிவந்த கடும் எச்சரிக்கை
அதிக வட்டிக்கு கடன் பெற்று பெருந்தொகையான கொமிசன்களை பெற்றுக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியின் பலன் தற்போது மக்கள் தலையில் வீழ்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka)தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக திவாலாகி வருவதாகக் கூறிய அவர், பால் மா, எரிவாயு, மண்ணெண்ணெய், மின்சாரம் இல்லாமல் நாடு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
நாட்டின் இரட்சிப்பு வேலைத்திட்டத்தை விரைவில் தேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என நம்புவதாக தெரிவித்த ரணவக்க, இந்த நிலையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் செய்யாத அதிகாரிகள் உட்பட அரச சார்பற்ற அதிகாரிகள் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது சுமார் 1.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், அடுத்த வருடத்தின் முதல் சில மாதங்கள் முக்கியமானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இந்தத் தொகை நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட கையிருப்பின் மீதித் தொகை என்றும், 2022ஆம் ஆண்டுக்குள் மட்டும் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் சுமை 7 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்றும் அவர் கூறினார்.