தமிழர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கம்! ஜே.வி.பியின் உறுதி
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தென் மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு-கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பகுதிகளையும் இணைத்து இந்த தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஒன்றிணைய வேண்டுமென இன்று கிளிநொச்சி வாழ் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இந்த ஆண்டு நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதிபர் தேர்தல்
சாதாரணமாக வடக்கில் வாழும் மக்கள் அதிபர் தேர்தலை பொருட்படுத்துவதில்லை.
கொழும்புக்கான மற்றும் சிங்களவர்களுக்கான ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையாகவே வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தேர்தலை பார்க்கிறார்கள்.
நீங்களும் அவ்வாறா அதிபர் தேர்தலை பார்க்கிறீர்கள். இலங்கையை பிரித்து ஆட்சி செய்த மற்றும் ஆட்சியாளர்களை பிரித்து தெரிவு செய்த காலம் நிறைவுக்கு வர வேண்டும்.
புதிய அரசாங்கம்
இலங்கை வாழ் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் அதிபர் தேர்தலாக இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும்.
சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் எமக்கு பலமான அணி உள்ளது. இந்த ஆதரவுடன், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களையும் இணைத்து நாம் பயணிக்க வேண்டும்.
அரசாங்கத்தை அமைப்பதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டை பிரித்து ஆட்சி அமைக்காது அனைவரையும் ஒன்றாக பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் அமைக்க வேண்டும்.
தமிழ் பங்காளர்கள்
தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பாரிய மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை கொண்டு நாம் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
எனினும், வடக்கு வாழ் மக்களின் ஆதரவின்றி எம்மால் வெற்றி பெற முடியாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும்.
நாம் பிரிந்து நிற்க தேவையில்லை. மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நமக்கிடையில் வேறு வேறாக காணப்பட்டாலும் பாசம், பசி போன்றவை இவ்வாறான வேறுபாடுகளை கொண்டில்லை.
இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் நிச்சயம் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |