இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும் நிலையில் இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று (15) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளியிட்டனர்.
எரிபொருள் விநியோகம்
மேலும் இக்கூட்டத்தின் போது, வருங்காலத்தில் எரிபொருள் விலையில் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை-இரட்டை இலக்க முறைமையை நீக்கிவிட்டு, கியூ.ஆர். குறியீட்டின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர், அரசாங்கம் வலுசக்தித் துறையைச் சரியாக நிர்வகிப்பதன் காரணமாகவே, மக்கள் தற்போதுள்ள நெருக்கடி குறித்துப் பாரிய அளவில் உணரவில்லை.
ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகளும் மின்வெட்டுகளும் இடம்பெற்ற போதிலும், எமது அரசாங்கம் இந்த நெருக்கடியைத் திறம்படக் கையாண்டுள்ளது.
எனினும், வலுசக்தி நெருக்கடி இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால், மக்கள் இது குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், நிலையான மின்சார முகாமைத்துவத்தைப் பின்பற்ற வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |