வெளிநாட்டு கடனளிப்பாளர்களின் கைகளில் இலங்கை - முக்கிய தகவல்களை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்
இலங்கையில் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு இடம்பெற்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வழங்கல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி
“இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நுண்நிதி கொள்கை திட்டத்தின் உடன்பாட்டை எட்ட வேண்டும்.
நடுத்தர மற்றும் நீண்ட காலக் கடனை நிலையானதாக மாற்ற கடன் இலக்குகளுடன் உடன்பட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான நிதிகளை பெற முடியும்.
வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் நிதி தொடர்பாக உறுதிப்படுத்தி எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் அவர்களது ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்தால் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கான நிதி வழங்கல் ஆரம்பிக்கப்படும். எனினும், இந்த கால அளவு வெளிநாட்டு கடனளிப்பாளர்களின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது.
வெளிநாட்டு கடனளிப்பாளர்களின் கைகளில் இலங்கை
இலங்கை, வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடன் உத்தியோகப்பூர்வமான தொடர்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்துக்கு பின்னரே வெளிநாட்டு கடனளிப்பாளர்களை தொடர்பு கொள்ள முடியும்.
கடனளிப்பாளர்களுடனான உத்தியோகபூர்வ கலந்துரையாடலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க உள்ளோம்” என்றார்.

