இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் ஸ்ரீலங்கா விஜயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சந்தேகம்!
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்ததன் நோக்கம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என ஜே.வி.பியின் யாழ் மாட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
அவர் இலங்கை வாழும் மலையக மக்களை அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக இங்கு வந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்ததற்கான முக்கிய காரணம் தமிழ் மக்களினுடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு அல்லது மாறாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அல்ல.
அதற்கான அழுத்தத்தினை ராஜபக்ச அரசாங்கத்திற்கு விதிப்பதற்கும் அல்ல. தற்பொழுது ராஜபக்ஷக்கள் இந்தியாவிடம் ஒரு ரில்லியன் டொலர் கடனாக கேட்டுள்ளனர். இந்தியா சொல்லுகின்றது நாங்கள் உங்களுக்கு கடன் தருவது என்றால் நீங்கள் எங்களுக்கு கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை தர வேண்டும் என, இதுதான் உண்மையான நிதர்சனம்.
ஆவே மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாங்கள் தெளிவாக சொல்லுகின்றோம். விசேடமாக வெளிநாட்டு சக்திகளுக்கு தாரைவார்க்க வேண்டாம். இந்தியா, சீனா, அமெரிக்கா, போன்ற நாடுகள் முற்றுமுழுதாக எமது நாட்டின் வளங்களை சுரண்டுவதற்கு முயற்சி செய்கின்றன.
இந்த உரையாடலின் ஒரு முயற்சியாகவே இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
அதன் பின்னர், நாங்கள் அனைத்து பிரச்சினைகளையும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம். மக்களுக்கான தீர்வுத் திட்டத்தினை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளோம் என சம்பந்தன் கூறியிருக்கின்றார்.
அவர்கள் எங்களுக்கு சாதகமான தீர்வினைப் பெற்றுத் தருவார்கள் எனவும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இது சம்பந்தன் போன்றவர்களுக்கு கடந்த 40 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.