மீண்டும் தலைதூக்கும் ராஜபக்சர்களின் அரசியல்..!பின்னனியில் ரணில்: வெளியாகியுள்ள எச்சரிக்கை
அரசாங்கம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் மீண்டும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் தலை தூக்குகின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய உணவு, மருந்து, டொலர் பற்றாக்குறைக்கான பழியை போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் மீது ரணில் அரசாங்கம் சுமத்துகின்றது எனவும் நாணயக்கார விசனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தை எதிர்த்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டம் முடிவடைந்து விட்டது என அனைவரும் நினைக்கிறார்கள். எனினும் அது நிறைவடையவில்லை.
மீண்டும் எழும் மக்கள் போராட்டம்
இலங்கை வாழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளின் முடிவாக மீண்டும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும். இலங்கையில் மீண்டும் எழும் மக்கள் போராட்டத்தை எவராலும் அடக்க முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதும் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதும் மக்கள் போராட்டங்களினால் அல்ல. மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை.
இளைஞர்களின் கைது சட்டவிரோதமானது இலங்கையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக என்பதை அரசாங்கம் மறக்க கூடாது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது போராட்டத்தில் பங்கு பற்றிய இளைஞர்களை கைது செய்வது சட்ட விரோதமான செயலாகும்.
ராஜபக்ச குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை
மக்கள் பல இனங்களுக்கு முகம் கொடுக்கின்ற இவ்வாறான சூழ்நிலையிலும் ராஜபக்ச குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு அரசாங்கம் அரசியலையும் நீதியையும் கற்றுக்கொடுக்க முயற்சிக்காது நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேருக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இலங்கையையும் அதன் அரசியலையும் சரி செய்யும் திட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
