ஸ்ரீலங்கா பொலிஸாருக்கான பயிற்சியை இடைநிறுத்திய ஸ்கொட்லாந்து- மனித உரிமை அமைப்பின் கோரிக்கை!
ஸ்கொட்லாந்து காவல்துறையால், ஸ்ரீலங்கா காவல்துறைக்கு வழங்கப்படவிருந்த பயிற்சி இடைநிறுத்தப்பட்ட விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
பயிற்சியை முழுமையாக நிறுத்துமாறு, ஸ்கொட்லாந்திற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா காவல்துறையில் இடம்பெற்ற கைதுகளின் போதான மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில் மே மாதம் ஸ்கொட்லாந்து காவல்துறையால் ஸ்ரீலங்கா காவல்துறைக்கு வழங்கப்படவிருந்த பயிற்சி இடைநிறுத்தப்பட்டது.
ஸ்கொட்லாந்து காவல்துறையால் தொடர்ச்சியாக நடத்தப்படும் பயிற்சி, இலங்கை காவல்துறையின் மனித உரிமை மீறல்களை அனுமதிக்கும் அபாயங்கள் காணப்படுவதாக, ஸ்கொட்லாந்து நீதி அமைச்சர் கீத் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில், நான்கு மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் ஸ்ரீலங்கா காவல்துறையின் பொலிஸாரின் மனித உரிமை செயற்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதையில் இருந்து விடுதலை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் பெக்ஸ் கிரிஸ்டி ஸ்கொட்லேண்ட் ஆகிய அமைப்புகள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன. ஸ்ரீலங்கா காவல்துறையின் ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான விருப்பம் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் இல்லாத நிலையில் எவ்வளவு பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கமும் காவல்துறையும் மறுசீரமைப்பில் உண்மையான ஆர்வம் காட்டும் வரை தற்போதைய பயிற்சியை நிறுத்துவதோடு, தற்போதைய பயிற்சித் திட்டத்தின் மீளாய்வு மற்றும் பகுப்பாய்வு விபரங்களை வெளியிடுமாறு குறித்த நான்கு அமைப்புகளும் கோரியுள்ளன. ஸ்கொட்லாந்து காவல்துறை ஸ்ரீலங்கா காவல்துறைக்கு பயிற்சி அளிக்க பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு நிதியுதவி அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானியா ஸ்ரீலங்கா காவல்துறைக்கான பயிற்சியை இரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது.
சித்திரவதைக்குப் பொறுப்பேற்பதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்த குறைந்தபட்சம் மூன்று ஸ்ரீலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு பிரித்தானியா பயிற்சி அளித்ததாக, ரெட்ரஸ் (Redress) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் இணைந்து 2019 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தது.
எனினும், 2012 ஆம் ஆண்டு முதல், 90 தடவைகள், பிரித்தானிய காவல்துறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் பயிற்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.