ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பல்- கரையொதுங்கும் உயிரினங்கள்; ஆரம்பமான விசாரணை!
ஸ்ரீலங்காவின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய, நேற்று வரை கரை ஒதுங்கிய 18 கடலாமைகள், 3 டொல்பின் மீன்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த மே மாதம் 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்த காரணமாக தென்னிலங்கை கடற்கரை மற்றும் கடல்வளங்களில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இறந்த நிலையில் மீன்களும், கடல் ஆமைகளும் கரையொதுங்கிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அவற்றில் இலங்கைக்கு உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக ஸ்ரீலங்கா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது.
புத்தளம் - கற்பிட்டி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கியுள்ள நிலையில், இவை பதிவான எண்ணிக்கை மட்டுமே என ஸ்ரீலங்கா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறை கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவா என வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை தொடர்பில் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையம் ஊடாக அறிக்கை பெற காலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த பின்னணியில், பேராதனை பல்கலைக்கழக்த்தின் மிருக மருத்துவ பீடம் ஊடாகவும் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.