சவுதி அரேபியாவிடம் ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சவுதி அரேபியாவிடம் ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் அடெல் பின் அஹமத் அல்-ஜுபைருடன் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மெய்நிகர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன் போது, சவுதி அரேபியாவுடனான இருதரப்பு உறவுகளைப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான சாத்தியங்களை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கி உதவியமைக்கு அவர் நன்றி தெரிவித்தார். திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறும் அவர் சவுதி அரேபியாவை கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்ப உதவிய சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அபிவிருத்தித் துறைகளிலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.
இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நெருக்கமாகப் பணியாற்றியமையையும், பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஆதரித்தமையையும் இரு அமைச்சர்களும் நினைவு கூர்ந்தனர்.