இலங்கைக்கான விசா! நிராகரிக்கப்படும் போலி செய்திகள்
இலங்கைக்கு பயணம் செய்பவர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை தற்போது தனியார் நிறுவனமொன்றால் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு திணைக்களத்துக்கும் தனியார் நிறுவனத்துக்கும் விசா வழங்குவது தொடர்பில் எந்தவொரு அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விசா வழங்கும் நடவடிக்கை
இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், விசா வழங்கும் நடவடிக்கை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவில்லை என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இணையவழி விசா முறைமை
மேலும், இணையவழி மூலம் விசா பெற்றுக் கொள்ளும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய இணையவழி திட்டத்தின் கீழ் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு இணையத்தளத்தின் ஊடாக விசாவை பெற்றுக் கொள்ள முடியுமென ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், அதிகளவான சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க எதிர்ப்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த நடவடிக்கை உதவுமென்பதோடு, சுற்றுலாத்துறையை வலுப்படுத்துமெனவும் எதிர்ப்பார்க்கப்படுவதாக ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |