சிறிலங்கன் ஏர்லைன்ஸை ஒத்த போலி இணையத்தளம் கண்டுபிடிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவையைப் போன்றே போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலி மூலம் முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை காவல்துறை கண்டறிந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு, srilankan.wuozgo.cc, srilankan.vaco.cc மற்றும் srilankan.krgo.cc ஆகிய மூன்று மோசடி இணையதளங்கள் வழியாக SriLankan.apk எனும் கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்துவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணையின் படி, இந்தச் செயலியானது வங்கித் தகவல்களைத் திருடும் ஒரு மென்பொருளாக செயல்படுவதாகவும், இதன் மூலம் மோசடியாளர்கள் ஒருவரது கைபேசியை எங்கிருந்தோ இயக்கவும், அதில் உள்ள தனிப்பட்ட தரவுகளைத் திருடவும் முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.
மோசடி தொலைபேசி எண்கள்
குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கைரேகை, முக அங்கீகாரம் போன்ற பாதுகாப்புத் தரவுகளைத் திருடி, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிச் செயலிகளுக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தைத் திருடுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகளுடன் 077-4558361, 011-7771979, 074-1142208, 077-5791209 மற்றும் 074-3268200 ஆகிய தொலைபேசி எண்கள் தொடர்புடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி, உடனடி நிதி நன்மைகள் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிப் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இத்தகைய போலியான செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |