“சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மோசமான செயல்” கதறும் பயணிகள்
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யக்காத்திருந்த 42 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு வழியாக டுபாய் செல்லும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் தவிக்க விடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தங்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்த சான்றிதழ் இருந்தும், ரெபிட் அன்டிஜன் சான்றிதழ் இருந்தால் மாத்திரமே விமானத்தில் அனுமதிப்போம் என சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிறுவனத்தின் இந்தச் செயற்பாடு குறித்து பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பயணி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
“ரெபிட் பரிசோதனையை பொறுத்தவரை 6 மணி நேரம் தான் அதற்கு மதிப்பு, நாங்கள் இங்கிருந்து கொழும்பு சென்று அதற்கு பிறகு டுபாய் செல்வதற்குள் 6 மணி நேரத்துக்கும் மேலாகிவிடும். இது குறித்து எவ்வளவோ எடுத்துக்கூறியும் எங்களை விமானத்திற்குள் அனுமதிக்கவில்லை.
கட்டட வேலைக்குச் செல்வோர் முதல் தொழில் நிமித்தமாக செல்வோர் வரை 42 பேர் இப்போது சென்னை விமானத்தில் இருக்கிறோம். இங்குள்ள எந்த அதிகாரியும் உருப்படியாக பதில் அளிக்கவில்லை. எங்கள் டிக்கெட் கட்டணத்தை முகவர்கள் எப்படியும் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் 42 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் என எனக்குத் தெரியாது. எங்களை டுபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.