சிறிலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி!
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல் மற்றும் முதலீட்டு வங்கியியல் நிபுணர் துமித் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அதிகாரசபை
அத்துடன் நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபை மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் சட்ட மற்றும் வானூர்தித் துறை நிபுணர்களும் இதில் இடம்பெறவுள்ளனர்.
அதற்கமைய சிறிலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பாகப் பரந்த பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான மூலோபாய மீளாய்வை மேற்கொள்வது அவசர முன்னுரிமை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நீண்டகால நிதிச் சுமையைக் குறைத்து நிதி ரீதியாக நிலைபேறானதும் வணிக ரீதியாகச் செயற்திறன் மிக்கதுமான தேசிய வானூர்தி சேவையை உருவாக்குவதே இந்த மீளாய்வின் பிரதான நோக்கமாகும்.
மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அல்லது அரசாங்கத்தினால் கலைக்கப்படும் வரை இந்தக் குழு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |