சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பயணிகளிடம் நிதித் தகவல்களைத் திருடும் மோசடிகள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போல நடித்து வட்ஸ்அப் அல்லது நேரடித் தொலைபேசி அழைப்புகள் மூலம் பயணிகளைத் தொடர்பு கொள்கின்றனர்.
இதையடுத்து, உரையாடல்களின் போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), வங்கிப் பின் இலக்கங்கள் மற்றும் கடன் அட்டை விபரங்கள் அல்லது பிற நிதித் தகவல்களை வழங்குமாறு கோருகின்றனர்.
கைப்பேசிச் செயலி
கைப்பேசிச் செயலிகளை நிறுவுமாறு அல்லது உங்களது கைப்பேசித் திரையைப் பகிருமாறு அவர்கள் அறிவுறுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோதும் பயணிகளை வட்ஸ்அப் மூலமாகவோ அல்லது முன்கூட்டியே அறிவிக்கப்படாத தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ பயணச்சீட்டுகள் அல்லது சலுகைகள் தொடர்பில் தொடர்பு கொள்ளாது.
அத்தோடு நிறுவனம் ஒருபோதும் OTP, வங்கிப் பின் இலக்கங்கள் மற்றும் கடன் அட்டை விபரங்கள் போன்ற தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களைக் கோரமாட்டாது.
இதனுடன் செயலிகளை நிறுவுமாறோ அல்லது திரையைப் பகிருமாறோ ஒருபோதும் பயணிகளிடம் கேட்கப்படமாட்டாது.
அதிகாரிகளிடம் முறைப்பாடு
இதனடிப்படையில், இவ்வாறான சந்தேகத்திற்கிடமான தொடர்பாடல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அவை குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் ஏனைய தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankan.com அல்லது அங்கீகரிக்கப்பட்ட சமூக வலைத்தள பக்கங்களை மாத்திரம் பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான போலித் தொடர்பாடல்களை முற்றிலும் புறக்கணிப்பதன் மூலம் உங்களது நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |