புதிய வருடத்துக்கான கடமைகளை ஆரம்பித்தல் : அரச ஊழியர்கள் சத்திய பிரமாணம்
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (01.01.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தனர்.

நீதிமன்ற வளாகம்
அத்துடன் 2026 ஆண்டின் முதல் நாளான இன்றைய தினம் (1) யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் மங்கல விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றலுடன் சத்யபிரமாணம் எடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் பாலசிங்கம் சரண்ராஜ் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்தில் முன்னர் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ஜெகநாதன் கயநிதி பாலன் கலந்து கொண்டிருந்தார்.
வடமாகாண குடியியல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி ராமக்கண்ணனின் நேரடி பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின் குமார், சிறுவர் நீதிமன்ற நீதவான் நிரஞ்சனி முரளிதரன், வடமாகாண தொழில் நியாய சபை தலைவர் தாரணி கணேசமூர்த்தி உட்பட நீதிமன்ற பணியாளர்கள் உத்தியோகத்தர்கள் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் சரண்ராஜ் பதவிப்பிரமாணங்களை வாசிக்க உத்தியோகத்தர்கள் அதனை தொடர்ந்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் த.பிரதீபன்
வவுனியா
புது வருடத்தின் முதல் நாளான இன்று அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்யும் நிகழ்வு அனைத்து அரச அலுவலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் வவுனியா மாவட்ட செயலகத்திலும் அரசாங்க அதிபர் பி. ஏ. சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்து தமது கடமைகளை இன்றைய தினம் ஆரம்பித்தனர்.
அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றியிருந்ததுடன் இரண்டு நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்று அதன் பின்னர் சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றதையடுத்து சர்வ மத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றிருந்தது.

செய்திகள் - கபில்
தம்பலகாமம்
2026ம் ஆண்டின் முதலாவது நாளான இன்று (01.01.2026) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அரச கடமைகளை வைபவ ரீதியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சர்வமதத் தலைவர்களின் மத அனுஷ்டானங்களும் இதன்போது இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் நாட்டுக்காக தியாகம் செய்து உயிர் நீத்த முப்படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

இந்த ஆண்டின் உறுதிமொழி
உறுதி மொழியாக " 2026ம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளாகிய இன்று இலங்கை சனநாயக சோசலிச குடியரசு முழு நாட்டு மக்களினதும் அபிலாசைகளை முன்னிலையாகக் கொண்ட இலக்குகளை நனவாக்கும் சுபீட்சம் மிகு புத்தாண்டின் தொடக்கத்தினை இவ்வாறு தடம்பதிக்கின்றது.
இன்றுடன் ஆரம்பிக்கும் புத்தாண்டில் ஒரே கொடியின் கீழ் நிழல் பெறும் ஒரே நாடாகவும் ஒரே தேசமாகவும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் குறிக்கோளினால் ஈர்க்கப்பட்ட மக்களின் அபிமானத்தை எடுத்துரைக்கவும் மற்றும் அவ்வாறே "வளமான நாடு அழகான வாழ்க்கை " ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம் எனும் தொனிப்பொருளின் சாரத்தை அதனூடாக எடுத்துக்காட்டவும் வழிகாட்டும் ஒழுங்கமைக்கப்பட்ட அரச நிர்வாகம் ஒன்றின் பங்காளர் ஒருவர் என்ற வகையில் நான் பொது மக்களின் பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகள் மற்றும் இலக்குகளை நடைமுறைப்படுத்தும் போது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்பினை வினைத்திறனுடனும், பயனுறுதியுடனும், செயலூக்கத்துடனும், அதிகூடிய அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், பொது மக்களுக்கு சார்பாகவும் முழு நிறைவாக நிறைவேற்றுவதாக உறுதி மொழிகிறேன்.“ எனபதாகும்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்திகள் - றொசான்
திருகோணமலை
2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடப்பிறப்பு மற்றும் கடமை ஆரம்ப நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் இன்று (01) குறித்த நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
புதுவருடத்தை அர்ப்பணிப்பு, நேர்த்தி மற்றும் பொறுப்புணர்வுடன் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் தனது உரையில் வலியுறுத்தியதுடன், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - தொம்சன், றொசான்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |