இஸ்ரேல் - காசா போரில் இந்தியாவின் நிலைப்பாடு இது தான்...ஐ.நா சபையில் இந்தியா விளக்கம்...!
இஸ்ரேல் காசாவிடையே முடிவின்றி போர் தொடர்ந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தப் போர் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (09) ஐக்கிய நாடுகள் அவையில் நடைபெற்ற விவாதத்தில், காசா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார்.
இதன்போது காசாவின் விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார், அதன்படி அவர் கூறியதாவது,
ஏராளமான உயிர்ச்சேதம்
"இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டையால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதங்களை சந்தித்துவிட்டோம். ஏராளமான உயிர்களை அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை இழந்துவிட்டோம். பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது, கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா தரப்பில் கோரப்படுகிறது.
காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. மேலும் சீரழிவை தவிர்க்க, காசா மக்களுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் நிலைப்பாடு
பலஸ்தீன மக்கள் தங்களுக்கான சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் விதத்திலான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த அனைத்து உறுப்பு நாடுகளும் செயலாற்ற வேண்டும்." என்றார்.
இவ்வாறு இந்தப் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |