தமிழர்களுக்காக குரல்கொடுத்து காணாமல்போன அருட்தந்தையின் திருவுருவச்சிலை திறப்பு
தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்த நிலையில் காணாமல்போயிருந்த அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை இன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் இந்த சிலை இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை ஜேசு சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த திறப்பு விழாவில் இலங்கை ஜேசு சபையின் தலைவர் உட்பட அருட்தந்தையர்கள்,ஜேசு சபை துறவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
1948ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மட்டக்களப்பு வருகைதந்த அவர் புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியராகவும் தொழிநுட்ப பயிற்சி கல்லூரியின் ஸ்தாபகராகவும் செயற்படடதுடன் மட்டக்களப்பின் விளையாட்டுத்துறைக்கும் அரும்பங்காற்றியுள்ளார்.
அத்துடன் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், படுகொலைகள்,இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக குரல்கொடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள், குருவானவர், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல்ஆக்கப்பட்டார்.



