மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்த வலியுறுத்து
நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃரல் (PAFFREL) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாகாண சபைகளின் பதவிக்காலம் 2014 செப்டம்பர் 20, அன்று முடிவடைந்து, அதன் பின்னர் 11 ஆண்டுகள் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும், ஆனால் பல்வேறு காரணங்களால், இது செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை
இதேவேளை, பொதுமக்களிடமிருந்து பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே, தேர்தலை நடத்துவதில் தாமதம் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளதாக PAFFREL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், மாகாண சபைச் சட்டம் அல்லது மாகாண சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டால், அது செயல்முறையை மேலும் தாமதப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை நடத்துவதன் அவசியம்
இருப்பினும், தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிவில் சமூகக் குழுக்களும் ஆர்வலர்களும் தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PAFFREL எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், பொது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும் ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் தேர்தல்களை நடத்துவது அவசியம் என்பதையும் குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
    
    மட்டக்களப்பு புலனாய்வு கோப்பில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தகவல்கள்: சி.ஐ.டி அறிக்கை அதிர்ச்சி தகவல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        