தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் (UN) ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அதிகாரிகளால் கைது
இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் ஏதிலி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார்.
ஓகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண ஆவணங்கள்
செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
2002 முதல், UNHCR என்ற ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் 18,643 இலங்கை தமிழ் ஏதிலிகளை, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைக்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
பொதுவில், இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பயந்து ஏதிலிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகிறது என்றும் அந்த உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன் இந்த விடயம், இராஜதந்திர வழிகளில் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 14 மணி நேரம் முன்
