லிபியாவில் புயல், மழை : 5200 பேர் பலி, 10 000 பேரைக் காணவில்லை
லிபியாவில் புயல் மற்றும் மழை காரணமாக 5,200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 10,000 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் உருவாகிய டேனியல் புயல் கடந்த 10ஆம் திகதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது.
லிபியாவில் டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பலத்த மழை பெய்தது.
துக்கதினம் அனுஷ்டிக்கப்படும்
கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன.
இதனால் டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதுகுறித்து கிழக்கு லிபியா நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கையில் , “புயல், கனமழை மற்றும் அணைகள் உடைந்ததால் இதுவரை 5200இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000இற்கும் மேற்பட்டோரை காணவில்லை’’ என்று தெரிவித்தனர்.
இதேவேளை கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளார்.