வேறு வழியில்லை - வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியத்துறையினர்
கொரோனா தொற்றின் பரவும் வேகம் இலங்கையில் தற்போதும் குறையாத நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 03ஆம் திகதி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான வைத்தியர் ரவி குமுதேஷ், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் 03ஆம் திகதி வைத்தியத்துறையினராக நாங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருக்கின்றோம். அன்றைய தினத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் 4 மணிநேர வேலைநிறுத்தத்தை செய்ய உள்ளோம். இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம்.
ஆனால் எமது கோரிக்கைகளை அரசாங்கத்திடம் கொண்டுசென்று பதில்பெறுவதற்கு வேறு வழியில்லை. சுகாதாரத்துறையிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 15 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக, சுகாதாரத் துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது தங்கிவாழ்பவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க வேண்டும். பயணக்கட்டுப்பாடு இடையே மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறையை சார்ந்த ஊழியர்களுக்கு பயணம் செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும், மற்றும் நிலுவைக் கொடுப்பனவு, போக்குவரத்து சலுகை போன்ற விடயங்களை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளையே நாங்கள் முன்வைக்கின்றோம்.
இந்த கோரிக்கைகள் பற்றி ஏற்னவே அதிகாரிகள் முன்பாக கொண்டுசென்ற போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணமாகவே இந்த தொழிற்சங்கப் போராட்டத்திற்கு நாங்கள் தள்ளிவிடப்பட்டிருக்கின்றோம் என்றார்.