புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து 'ஸ்ரெம் செல்' - குருத்தணுவை பெற்று உயிரை காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சி!!
பிரித்தானியாவில் வாழும் ஈஷா என்ற நான்குவயது ஈழத்தமிழ் சிறுமி அரிய வகை மைலோயிட் லுகேமியா எனப்படும் எலும்புமச்சை புற்றுநோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்னும் மூன்று வாரங்களுக்குள் அவருக்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் வைத்தியர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட தெற்காசிய மக்களிடம் இருந்து ஸ்ரெம் செல் எனப்படும் குருத்தணுவை பெற்று அதை ஈஷாவுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என குடும்பத்தினரும் வைத்தியர்களும் கோரி வருகின்றனர். ஈஷாவின் உயிரை காப்பாற்றும் நோக்கில் குடும்பத்தினருடன் இணைந்து தமிழ் வைத்தியர்கள், ஆலயங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பொருத்தமான குருத்தணுவை கண்டறியும் பல நடமாடும் நிகழ்வுகளையும் ஏற்படு செய்துள்ளனர்.
வழங்குனருக்கு எந்த பாதிப்பும் இன்றி 2 நிமிடங்களுக்குள் செய்யப்படும் எளிய முறை மூலம் பொருத்தமானவரை கண்டறிய முடியும்.
இதேவேளை குறித்த சிறுமியின் தற்போதைய நிலை தொடர்பில் உறுதியான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவருடைய மாமி துளசி IBC- தமிழுக்கு வழங்கிய தகவல்களை கீழுள்ள காணொளியில் பார்வையிடமுடியும்.
பல தரப்பட்ட இடங்களிலிருந்தும் ஈஷாவுக்கான பிரார்த்தனைகளும் ஆதரவும் பெருகிவரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலையை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த வித்தியாவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.