கோட்டாபயவை சிக்கவைக்க கடும் முயற்சி
எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தை தொடர்ந்து தென்னிலங்கை கடலில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்படக் காரணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொறுப்பற்ற விடயம் என சித்தரிக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் இந்த விடயத்தில் அவரை சிக்க வைக்க முயற்சி செய்வதாகவும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்னளது.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா, இதுகுறித்து கருத்து வெளியிட்டார்.
இயற்கை அழிவுகள் எதிர்பாராத சம்பவங்களாகும். அதேபோன்றுதான் இந்த எக்ஸ்பிரஸ் கப்பலின் விபத்தாகும். ஒரு கப்பல் துறைமுகத்திலிருந்து பயணிக்க முன் சில தரங்கள் பார்க்கப்படும். அந்த வகையில் எக்ஸ்பிரஸ் கப்பலில் சிறிய தீ பற்றக்கூடிய சிதைவு ஏற்பட்டிருப்பதை இந்திய துறைமுக அதிகாரிகளிடம் குறித்த கப்பலின் மாலுமி மறைத்து அனுமதிப் பத்திரத்தைப் பெற்று இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கின்றார்.
இந்த நிலையில் விசாரணை நடைபெறுவதால் இந்த கப்பல் சார்ந்த பொறுப்புகூறல் யாருடையது என்பதை இப்போதே தெரிவிக்க முடியாது. கடற்படையினர் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை. கடற்பிரதேசத்தில் ஏதாவது ஆபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில்தான் கடற்படை தொடர்புபடுகின்றது. விசாரணையில் கப்பலின் மாலுமி, அதிகாரிகள் தவிர்ந்த இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாமதித்தார்களா என்பது விசாரணையில்தான் தெரியவரும்.
அதுவரை அரச அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும் என்று தெரிவிக்கின்ற சில ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும், அரச தலைவர் கோட்டாபயவை இந்த விடயத்தில் சிக்கவைக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் கடற்படையை அவர்கள் கோர்த்துவிடுகின்றனர்.
அதேவேளை, கடல் வளம், மீன் வளம் என்பவற்றுக்கு இதில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் சில புகைப்படங்கள் போலியானவை என்பதை தெரிவிக்கின்றேன்.
உயிரிழந்த மீன்களில் 90 வீதமானவை அந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் விழுங்கியதன் காரணமாகவே தவிர, இரசாயன சேர்க்கையினால் அல்ல. இந்த நிலையில் மீன்வளம், கடல்வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.
தற்சமயம் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பார்க்கின்ற நிலையில் வளிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். அரசாங்கம் எதனையும் மறைக்காது. சரியான வழியில் இந்த பாதிப்பை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.