அரசாங்கத்தின் தவறான கொள்கையால் மக்களுக்கு போராட்டமான வாழ்க்கை - சார்ள்ஸ் நிர்மலநாதன்
அரசாங்கத்தின் தவறான கொள்கை காரணமாக மக்கள் போராட்டமான வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டு மக்கள் மிகப்பெரும் போராட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையில் நின்றே அனைத்துப் பொருள்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை எழுந்துள்ளது.
இந்தத் தவறை சுட்டிக்காட்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை பதவி நீக்கக்கூடிய அரசாங்கமாக இருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, இந்திய இழுவை படகுகளால் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகிறார்கள்.
இப்பிரச்சினை தொடர்பில் பேசும்போதெல்லாம் இந்திய பிரதமருடன் பேசுவதாக கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார். ஆனால் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடுகளாலும் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
கிழக்கு மீனவர்களின் பிரச்சினையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு வழங்க வேண்டும்” என்றார்.
