மொட்டுக்கட்சியின் உறுப்பினர்களை மகிழ்விக்கும் ரணில் - கடுமையாக சாடும் அனுரகுமார
“மொட்டுக்கட்சியின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விப்பதே ரணில் விக்ரமசிங்கவின் ஒரே திட்டமாக இருக்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று(1) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அதிபர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.
மொட்டுக்கட்சியை மகிழ்வித்தல்

ரணில் எழுந்திருக்கும் போது மொட்டுக்கட்சியினர் எழுந்திருக்கின்றனர். அவர் அமரும் போது மொட்டுக்கட்சியினர் அமருக்கின்றனர். ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது மொட்டுக்கட்சியினர் சிரிக்கின்றனர். மேலும் சிலர் ரணில் உரையாற்றும் போது தொலைக்காட்சியில் தெரிவதற்காக அவருக்கு பின்னால் வந்து அமருகின்றனர்.
மொட்டுக்கட்சியின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விப்பதே ரணில் விக்ரமசிங்கவின் ஒரே திட்டமாக இருக்கின்றது.
எனினும் இராணுவத்தினர், காவல்துறையினர், கமத்தொழிலாளர்கள், மீனவர்களை மகிழ்விக்கும் எந்த திட்டங்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இல்லை. இவர்கள் அனைவரும் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ளனர்.
நாம் அனைவரும் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.