ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்
திருகோணமலையில் (Trincomalee) ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி கந்தளாய் - முள்ளிபத்தானை சிங்கள வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை - கொழும்பு (Colombo) பிரதான வீதியின் 96ஆவது சந்தியில் இன்று (27) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் உயர்தர மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்
ஆரம்பத்தில் வீதியோரத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாத காரணத்தினால், திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தம்பலகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு வருகை தந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றினார்.
இதன்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கோரிக்கைக்கு தகுந்த பதில்
பின்னர் காவல் நிலைய பொறுப்பதிகாரி கந்தளாய் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் காமினி பண்டாரவை அழைத்து பெற்றோருடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட உடன்பாட்டின்படி, இன்னும் ஒரு வாரத்தில் கோரிக்கைக்கு தகுந்த பதில் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
