திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: தமிழ் பாடசாலையில் சம்பவம்
பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த இரண்டு மாணவர்கள் பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை (Ampara), பதியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
இந்நிலையில், இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞராவார்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது இந்த சந்தேகநபர்,போதை மாத்திரைகளை கொடுத்த பின்னர், அவர்கள் பாடசாலைக்கு வந்து அவற்றை சாப்பிட்டதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளாார்.
இச்சம்பவம் குறித்து பாடசாலை அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |