கோட்டாபயவை முட்டாள் என விழித்த ஆளும்தரப்பு எம்.பி
நாளையதினம் அரச தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாடு பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளதாகவும் அதற்கு கிராமிய மரண வீட்டிற்குரிய அதிகாரம் கூட இல்லை எனவும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தினூடாக தீர்வொன்றை பெற்று அமைச்சரவைக்கு இடையிலான அரசாங்கத்தை உருவாக்குவதே தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது முதலில் செய்ய வேண்டியது மக்களைக் காப்பாற்றுவது என்றும், நாம் அறிந்த வரலாற்றில் இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற மக்கள் வரிசையில் நின்று இறந்ததாக வரலாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நோக்கி விரலை நீட்டுவது மட்டுமன்றி, பொருளாதாரம் பற்றி துளியும் தெரியாத ஒருவரை நிதி அமைச்சராக நியமித்த இந்த முட்டாள் அரச தலைவரே பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
