திடீர் சோதனை நடவடிக்கை : 2 பெண்கள் உட்பட பலர் கைது
கடலோர காவல்துறை பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 சந்தேக நபர்கள் இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு (Colombo) - ஜம்பட்டா வீதி, புனித அந்தோணி வீதி மற்றும் ரத்னம் வீதி 44 தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடவடிக்கையில் கலந்துகொண்டோர்
குறித்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட சுமார் 40 வீடுகள் மற்றும் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை முழுமையாக சோதனையிட்டதில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கைக்கு "அமாய்" என்ற மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட சுமார் 50 காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |