திடீரென இருளில் மூழ்கிய இரண்டு ஐரோப்பிய நாடுகள் : அனைத்து சேவைகளும் முடக்கம் : மக்கள் பரிதவிப்பு
ஸ்பெயின்(spain) மற்றும் போர்த்துகலில்(portugal) இன்று (28) திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதால் பல அத்தியாவசிய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச விமான நிலையங்களை மூட நடவடிக்கை
மின் தடை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இரு நாடுகளிலும் உள்ள மாட்ரிட் சர்வதேச விமான நிலையம் மற்றும் லிஸ்பன் சர்வதேச விமான நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் கைபேசி இணைய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து, கடும் போக்குவரத்து நெரிசல்
ஸ்பெயினின் மத்திய மாட்ரிட்டில் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் ஸ்பெயினின் தேசிய தொடருந்து நிறுவனமான ரென்ஃபே, மின் தடை காரணமாக தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
இருப்பினும், ஸ்பெயினின் வடக்கு மற்றும் தெற்கில் மின்சாரத்தை மீட்டெடுக்க நாட்டின் மின்சாரத் துறை செயல்பட்டு வருவதாக ஸ்பானிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயினில் தற்போதைய மின்வெட்டை மீட்டெடுக்க சுமார் 10 மணிநேரம் ஆகலாம் என்று நாட்டின் மின்சாரத் துறை கூறுகிறது, அதே நேரத்தில் போர்த்துகலில் தற்போதைய மின்வெட்டை மீட்டெடுக்க சுமார் ஒரு வாரம் ஆகலாம் என்று போர்த்துகீசிய எரிசக்தி நிறுவனமான REN கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் பிரதமரும் தேசிய பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையங்களுக்கு வரவேண்டாம்
மின்சாரத் தடை காரணமாக ஸ்பெயின் விமான நிலையங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு ஸ்பெயினில் உள்ள விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
இதற்கிடையில், ஸ்பெயினின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக போர்த்துகல் குற்றம் சாட்டுகிறது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஸ்பெயின் இன்னும் பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் ஏற்பட்ட மின் தடை காரணமாக பிரான்சின் சில பகுதிகளில் தற்காலிக மின் தடை ஏற்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
